பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்: நான்கு சந்தேகநபர்கள் கைது; 29 வரை விளக்கமறியல்.!!!
பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 மற்றும் 31 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் அஸ்கிரிய, கண்டி மற்றும் கொதட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களில் மூவர் நேற்று கிரிபத்கும்புர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், மற்றைய நபர் இன்று பேராதனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிஹிரிய பகுதியில் உள்ள ஓடை ஒன்றில் மாணவர்கள் நீராடிக்கொண்டிருந்த போது, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த குழுவினருடன் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதன் விளைவாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த நான்கு மாணவர்கள் தற்போது பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நான்கு சந்தேகநபர்களையும், எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.