மட்டக்களப்பில் பெண்ணின் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சி; சிசிரிவியில் சிக்கிய மர்மநபர்.!!!
மட்டக்களப்பு நகரில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் பறிக்க முயன்ற சம்பவம் சனிக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஆலய வீதியில் இரு பெண்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் அவர்களைப் பின்தொடர்ந்துள்ளார்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் இருந்தவாறே குறித்த நபர் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.
எனினும், சங்கிலியை முழுமையாக பறிக்க முடியாத நிலையில், குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பான காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.