மட்டக்களப்பில் மண் அகழ்வு அனுமதி விவகாரம்; அதிகாரியை அச்சுறுத்தியதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீது குற்றச்சாட்டு.!!!
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், புவிச்சரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்திற்குச் சென்று, அங்கு பணியாற்றும் தமிழ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தீர்மானத்திற்கு அமைய நூற்றுக்கணக்கான மண் அகழ்வு அனுமதிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இடைநிறுத்தப்பட்ட அனுமதிகள் தொடர்பில் கோரிக்கை முன்வைத்து அலுவலகத்திற்குச் சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர், பணியக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன்போது, தமிழ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்தும் வகையில் அவர் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும் அரச அதிகாரிகளை அச்சுறுத்தும் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கடந்த காலங்களிலும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.