மட்டக்களப்பு தன்னாமுனை பகுதியில்: முதிய கணவன்-மனைவி விஷம் அருந்தி தற்கொலை.!!!
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனை பகுதியில், முதியவர்களான கணவன் மற்றும் மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (12) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தன்னாமுனை இராசையா லேனைச் சேர்ந்த 74 வயதுடைய அன்டனி சில்வெஸ்டர் மற்றும் அவரது மனைவி 73 வயதுடைய மேரி ஜெர்மைன் ஆகிய இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த பெண் தீராத நோயால் பாதிக்கப்பட்டு கட்டிலில் படுத்த நிலையிலேயே இருந்ததுடன், அவரை கணவர் பராமரித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ தினமான நேற்று மாலை சுமார் 6.00 மணியளவில் கணவர் மதுபோதையில் வீட்டிற்கு வந்த பின்னர், விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதுடன், மனைவிக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்ததும் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், சடலங்களை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கினார். அதனையடுத்து, சடலங்கள் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த 12 நாட்களுக்குள் இப்பகுதியில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
