இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் தோட்டாக்கள் மீட்பு.!!!
•‘ஹஸ்தி சேனா’ தேசிய நடவடிக்கையின் கீழ் இராணுவம் – வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் இணைந்து விசேட தேடுதல்.
காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாப்பதையும், அவற்றுக்கு எதிரான அச்சுறுத்தல்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் ‘ஹஸ்தி சேனா’ தேசிய நடவடிக்கையின் கீழ், மகாகனதராவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று உள்ளிட்ட வெடிபொருட்கள், தோட்டாக்கள் மற்றும் வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு பொறிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவமும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து இந்தக் கூட்டுச் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
மகாகனதராவ, மரதன்கல்ல, கரடிக்குளம், மககிரிந்தேகம, மிஹிந்தலை சரணாலயம் மற்றும் புஞ்சிக்குளம் ஆகிய பகுதிகளை மையப்படுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டுதலின் கீழும், இலங்கை இராணுவத் தளபதியின் மேற்பார்வையிலும் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கைக்கு, 212 ஆவது காலாட்படைப் பிரிவின் கீழ் இயங்கும் 7 ஆவது இலங்கை கவசப் படைப்பிரிவு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
21 ஆவது காலாட்படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கமிந்த சில்வா மற்றும் 212 ஆவது காலாட்படைப் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுரங்க பஸ்நாயக்க ஆகியோரின் மேற்பார்வையில், 7 ஆவது இலங்கை கவசப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் பிரபாத் அபேவிக்ரமவின் வழிநடத்தலில், படையணித் தளபதி மேஜர் திமுது முல்லேவிதானவின் பங்கேற்புடன் இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் 7 இராணுவ அதிகாரிகள் மற்றும் 68 ஏனைய படையினர் என மொத்தம் 75 இராணுவத்தினர் பங்கேற்றிருந்தனர்.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் சார்பில் உதவிப் பணிப்பாளர் சன்ன சுரவீர உள்ளிட்ட திரப்பனை வனவிலங்கு அலுவலகத்தின் பிரதேச பாதுகாப்பு அதிகாரிகளும், சுற்றாடல் அமைச்சின் சார்பில் ஆலோசகர் ரவீந்திர காரியவசமும் இந்நடவடிக்கையில் இணைந்துகொண்டனர்.
பொதுமக்களின் அன்பைப் பெற்ற ‘அக்போ’ யானை உள்ளிட்ட பல காட்டு யானைகள் அடிக்கடி நடமாடும் பகுதியாக மகாகனதராவ பிரதேசம் காணப்படுவதுடன், வனவிலங்கு குற்றங்கள் அதிகளவில் இடம்பெறக்கூடிய பகுதியாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
காட்டு யானைகள் உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளின் உயிர்களையும் பாதுகாத்தல், சட்டவிரோத வேட்டையாடலைத் தடுத்தல் மற்றும் வனவிலங்குகளுக்கு எதிரான குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துதல் ஆகியனவே ‘ஹஸ்தி சேனா’ தேசிய நடவடிக்கையின் பிரதான நோக்கங்களாகும்.
வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான கூட்டுச் சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.






