கட்டுப்பாட்டை இழந்த கார்; இரு முச்சக்கர வண்டிகள், இரு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்து.!!!
மட்டக்குளியில் நேற்று (16) இரவு இடம்பெற்ற பல வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று வெளியிட்ட தகவலின்படி, வத்தளை திசையிலிருந்து மட்டக்குளிய நோக்கி அதிக வேகத்தில் பயணித்த கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெர்குசன் சந்திப்புக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த கார், அந்தப் பகுதியில் பயணித்த இரண்டு முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் அடுத்தடுத்து மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மொத்தம் 13 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் மட்டக்குளியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் 44 மற்றும் 64 வயதுடையவர்கள் எனவும், மூன்றாவது நபரின் வயது தொடர்பான தகவல் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த ஏனைய 10 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய காரை செலுத்திய மட்டக்குளியைச் சேர்ந்த 52 வயதுடைய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



