பொலிஸாரிடம் வசமாக மாட்டிக்கொண்ட: மோட்டார் சைக்கிள் திருடன்.!!!
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு கடந்த ஒரு வருடமாக தலைமறைவாக இருந்து வந்த சந்தேக நபரொருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்சர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, நேற்று (15) குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சீ.ஐ. ரத்னாயக்க அவர்களின் பணிப்பின் பேரில், பெருங்குற்றத் தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர் திரு. தினேஷ் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், திருட்டை மேற்கொண்டு தலைமறைவாக இருந்து வந்த கிண்ணையடி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கையை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்புப் பிரிவு உத்தியோகத்தர்களான பொலிஸ் பரிசோதகர் திரு. பி.பி. உதயங்க, திரு. தினேஷ் (8656), திரு. அக்ரம் (92658), திரு. பண்டார (30046), திரு. வீரசிங்க (39210), திரு. நிஷாந்தன் (94571) ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.
கைது நடவடிக்கையின் போது, சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதாகவும், பின்னர் சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளும் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
