நாடு முழுவதும் குற்றத் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: ஒரே நாளில் 679 பேர் கைது; 30,000க்கும் மேற்பட்டோர் சோதனை.!!!
நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் (10) நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, மொத்தமாக 30,322 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் 679 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 275 பேரும், திறந்த பிடியாணை கொண்ட 150 பேரும் குறித்த சோதனைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 507 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 5,283 பேர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.