ரூ.30,000 இலஞ்சம் கோரிப் பெற்றதாகக் குற்றச்சாட்டு: சுங்கத் திணைக்கள பாதுகாப்பு அதிகாரி கைது.!!!
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ரூ.30,000 இலஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரணதுங்க கமராலலாகே சதுர தேவிந்த ரணதுங்க என அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர், நேற்று (12) பிற்பகல் சுமார் 2.25 மணியளவில் கொழும்பிலுள்ள இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானிலிருந்து முறைப்பாட்டாளரின் மருமகனும் அவரது நண்பரும் இறக்குமதி செய்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் சுங்க அனுமதியுடன் விடுவிப்பதற்குத் தேவையான ஆவணங்களை வழங்குவதற்காகவே சந்தேகநபர் இலஞ்சம் கோரியுள்ளதாக விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒவ்வொரு மோட்டார் சைக்கிளுக்கும் தலா ரூ.15,000 வீதம் மொத்தமாக ரூ.30,000 இலஞ்சமாகக் கோரிப் பெற்றுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.