விபத்துக்குப் பின்னான மரணம்; நீதிமன்ற உத்தரவின் பேரில் பெண்ணின் சடலம் தோண்டியெடுப்பு.!!!
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம், தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட 41 வயதுடைய பெண்ணொருவரின் சடலம், நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று (07) பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ. தர்சினி முன்னிலையில் பொலிஸாரினால் குறித்த சடலம் தோண்டியெடுக்கப்பட்டது.
கடந்த 12.07.2026 அன்று காத்தான்குடி – கிரான்குளம் கூட்டுறவுச் சந்திக்கு அருகில், காத்தான்குடியிலிருந்து களுவாஞ்சிக்குடி நோக்கிப் பயணித்த கார் ஒன்றும், எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் கிரான்குளம் கடற்கரை வீதியைச் சேர்ந்த 41 வயதுடைய சர்வேஸ்வரன் கஜேந்தினி என்ற பெண் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், காரின் சாரதியான கிரான்குளம் 07 பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய வைத்தியர் சுந்தரலிங்கம் பிரதீபன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் 13.07.2026 அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், வழக்கு 15.09.2026 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் 21.07.2026 அன்று வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். பின்னர் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து 07.08.2026 அன்று மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 11.08.2026 அன்று அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட சடலம் 12.08.2026 அன்று தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
பின்னர் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உயிரிழந்த பெண்ணின் மரணச் சான்றிதழை அவரது உறவினர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்த நிலையில், அதனை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்று சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் பெண் உயிரிழந்துள்ளமை தொடர்பில் சந்தேகம் எழுந்ததையடுத்து, அவரது மரணம் குறித்த வீதி விபத்தின் விளைவாக ஏற்பட்டதா என்பதை கண்டறிவதற்காக பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய, நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பெண்ணின் சடலம் இன்று நீதிபதி ஏ. தர்சினி முன்னிலையில் பொலிஸாரினால் தோண்டியெடுக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.





