பிரதி அமைச்சர் முனீர் முலப்பர்: ஓட்டமாவடி கொரோனா மையவாடிக்கு விஜயம்.!!!
தேசியத்தில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் பேசப்பட்ட முக்கிய இடமாக கருதப்படும், கொரோனா தொற்று காலத்தில் மரணித்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட கோறளைப்பற்று மேற்கு – ஓட்டமாவடி மஜ்மா நகர் கொரோனா மையவாடிக்கு, தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சமய-கலாச்சார பிரதி அமைச்சருமான முனீர் முலப்பர் அவர்கள் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை கள விஜயமொன்றினை மேற்கொண்டார்.
இலங்கையின் நாலாபுறங்களிலிருந்தும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் 3,600-க்கும் மேற்பட்ட ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இம்மையவாடியின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு, பேருவளை சேர்ந்த தனவந்தர் ஸவாஹிர் பெரும் பரப்பைக் கொண்ட மையவாடிக்கு சுற்றுமதில் அமைத்துக் கொடுப்பது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடலாக இக்கள விஜயம் அமைந்திருந்தது.
மேலும், குறித்த மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஸவாஹிர் ஹாஜியாரின் மனைவியின் பெயரில், ஏற்கனவே மஸ்ஜிதுடன் இணைந்த சகல வசதிகளையும் கொண்ட ஓய்வெடுக்கும் மண்டபம் ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அத்துடன், மையவாடியை அண்டிய பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பான பிரச்சினைகள், மையவாடிக்கான காணியை சட்டரீதியாக பிரதேச சபையின் உரிமைக்குள் கொண்டுவருவது, மேலும் நாட்டின் நாலாபுறங்களிலிருந்தும் தரிசனத்திற்காக வருவோருக்கான அடிப்படை வசதிகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து பிரதி அமைச்சருடன் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் தொடர்ச்சியாக, மையவாடி தொடர்பான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க, வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட நம்பிக்கையாளர் நிறைவேற்று சபை ஒன்றை அமைப்பது என பிரதி அமைச்சர் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், தனவந்தர் ஸவாஹிர் ஹாஜியாரின் மகன் அப்ஸார், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் சமீம், லத்தீப், சமூக சேவையாளர் எம்.ஏ.சி. நியாஸ், மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் பாரூக், பிராஜா சக்தி தவிசாளர்கள், வட்டாரக் குழு தலைவர்கள், கல்குடா உலமா சபை உறுப்பினர்கள், ஜுனைட் நளீமி, மேலும் மையவாடிக்கு பொறுப்பாக பிரதேச சபையினால் நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் அல்பத்தாஹ், றபீக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.



















