வட மாகாண முஸ்லிம்களின் வெளியேற்றமும் நீதிக்கான கோரிக்கையும்: காத்தான்குடியில் விசேட கலந்துரையாடல்.!!!
-எம்.ரி.எம்.யூனுஸ்-
வட மாகாண முஸ்லிம்கள் எதிர்கொண்ட இனச் சுத்திகரிப்பு மற்றும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பான விசேட கலந்துரையாடல், ஞாயிற்றுக்கிழமை (11) காத்தான்குடியில் நடைபெற்றது.
எக்ஸத் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில், காத்தான்குடி அல்-மனார் அறிவியல் கல்லூரியின் அப்துல் ஜவாத் மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
எக்ஸத் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜே.எல்.எம். ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் இஸ்லாமிய கற்கைகள் துறைத் தலைவரும் சட்டத்தரணியுமான பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். நபீஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மனித உரிமைச் சட்டத்தரணியும், சத்தியப்பிரமாண ஆணையாளரும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டின் சொலிசிட்டருமான எம்.எம். பஷீர் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார்.
சமூகச் செயற்பாட்டாளரும் ஆய்வாளருமான சட்டத்தரணி முஹைதீன் சாலி இந்நிகழ்வில் சிறப்புரையாற்றினார்.
வட மாகாண முஸ்லிம்களின் வரலாறும் நீதிக்கான கோரிக்கையும்: வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தின் வரலாற்றுப் பின்னணி, அதன் சமூகத் தாக்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதி தொடர்பில் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
வட மாகாண முஸ்லிம்களின் வரலாற்றுச் சுவடுகளைப் பாதுகாத்தல், அவர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்துதல் மற்றும் நீதி தொடர்பான கோரிக்கைகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் இந்நிகழ்வின் முக்கிய கருப்பொருள்களாக அமைந்தன.
‘முஸ்லிம் டைம்ஸ்’ பத்திரிகை வெளியீடு: இந்நிகழ்வில் ‘முஸ்லிம் டைம்ஸ்’ பத்திரிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பத்திரிகையின் முதல் பிரதியை சட்டத்தரணி எம்.எம். பஷீர், சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் சேவையின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவரும் தொழிலதிபருமான ஏ.எல். மீராசாகிப் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
















