கடற்படையின் அதிகாலை நடவடிக்கையில் சிக்கிய போதைப்பொருள் கடத்தல்; ஒருவர் கைது.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
யாழ்ப்பாணம் மாதகல், குசுமன்துறை கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின்போது, ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (27) அதிகாலை வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட படகுப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படை கப்பல் அக்போ நிறுவனத்தின் பணியாளர்களால் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரும், அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட சட்டவிரோதப் பொருட்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரின் நிபுணத்துவ பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவற்றில் ஐஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட படகு மற்றும் போதைப்பொருட்கள் தொடர்பில் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


