வறட்சி காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு – தேசிய நீர் வழங்கல் சபை அவசர வேண்டுகோள்.!!!
நாட்டில் நிலவி வரும் வறட்சியான வானிலை காரணமாக, பொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
நீர் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து, வறட்சி நிலை மேலும் தீவிரமடைந்தால், எதிர்காலத்தில் நீர் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய சூழல் உருவாகக்கூடும் என சபை தலைவர் எச்சரித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையம் நாளொன்றுக்கு சுமார் 560,000 கன மீற்றர் நீரையும், லேபுகம சுத்திகரிப்பு நிலையம் 150,000 கன மீற்றர் நீரையும் உற்பத்தி செய்து வருகிறது. இருப்பினும், இந்த நிலையங்கள் தங்களுக்கு கிடைக்கும் கொள்ளளவிற்குள் மட்டுமே நீரை விநியோகிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சபை தலைவர் பண்டார தெரிவித்ததாவது, “நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று எங்களால் கூறப்படவில்லை. ஆனால் தேவையற்ற வீண்விரயத்தைத் தவிர்த்து சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
இல்லையெனில், உயர்நிலப்பகுதிகளில் வசிப்போருக்கும், நீர்க்குழாய் அமைப்பின் இறுதிப் பகுதிகளில் உள்ளவர்களுக்கும் குறைந்த அழுத்தத்திலேயே நீர் கிடைக்கும் நிலை உருவாகலாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடல்நீர் கலப்பு அதிகரித்து வருவது கவலைக்கிடமானதாக உள்ளதுடன், மணல் அகழ்வு போன்ற மனிதச் செயல்பாடுகளும் இந்த பிரச்சினையை மேலும் மோசமாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
உப்புநீர் கலப்பை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், அதற்கான தடுப்பணை அமைக்கும் பணிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.