“கல்வியே எதிர்காலம்”: 60 மாணவர்களுக்கு புதிய பாதணி – போக்குவரத்து, சட்ட ஒழுங்கு தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு.!!!
– எம்.ரி.எம். யூனுஸ் –
“கல்வியே எதிர்காலம்” என்ற உயரிய நோக்கத்தை முன்னிறுத்தி, 60 பாடசாலை மாணவர்களுக்கு புதிய பாதணிகள் வழங்கும் நிகழ்வும், மாணவர்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு உரையும் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை மாலை காத்தான்குடி அல்-மனார் அறிவியல் கல்லூரி அப்துல் ஜவாத் மண்டபத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி நகரசபை உறுப்பினர் ஏ.எம்.எம். பர்ஸாத் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்குகள் தொடர்பாக மாணவர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு உரையை உளவளத்துணையாளர், சட்டத்தரணி முகைதீன் சாலி (LLB) வழங்கினார். மாணவர்கள் எதிர்கொள்ளும் அன்றாட சவால்கள், சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவம், சட்ட விழிப்புணர்வின் அவசியம் போன்ற விடயங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ.சி.எம்.ஏ. சத்தார், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அழககோன், குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி நந்தன புஸ்பகுமார, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மன்முனைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சியாட், காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.எம். சபீல் நழீமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் செயற்குழு உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
கல்விக்கான ஆதரவை வலுப்படுத்துவதுடன், மாணவர்களின் ஒழுக்கமும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர் பர்ஸாத் தெரிவித்தார்.





























