‘எல் நினோ’ மழை எச்சரிக்கை; காத்தான்குடியில் அவசர முன்னாயத்தக் கூட்டம்.!!!
• காத்தான்குடி நகர முதல்வர் தலைமையில் முக்கிய தீர்மானங்கள்.
நாட்டில் எதிர்வரும் நாட்களில் ஏற்படக்கூடிய ‘எல் நினோ’ (El Niño) காலநிலைத் தாக்கம் காரணமாக, சுமார் 800 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிகக் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனப் பிரபல வானிலை ஆய்வாளரும் புவியியல் பேராசிரியருமான நா. பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குறிப்பாக, எதிர்வரும் 19.10.2026, 05.11.2026, 22.11.2026 மற்றும் 04.12.2026 ஆகிய தினங்களில் கடும் மின்னல், பலத்த காற்று மற்றும் தீவிர மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அவசரக் கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று (06) காத்தான்குடி நகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி நகர முதல்வர் SHM. அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நகர சபையின் செயலாளர், நகர சபை உறுப்பினர்கள், நகர சபை மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், ஜம்இய்யத்துல் உலமா சபை, பள்ளிவாயில்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பு, சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்
01. காலநிலை அனர்த்தங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்கங்களில் முன்னெடுக்குமாறு ஜம்இய்யத்துல் உலமா சபையினால் அனைத்துப் பள்ளிவாயல்களுக்கும் அறிவுறுத்தல் வழங்குதல்.
02. அனர்த்த நிலைமை ஏற்படும் பட்சத்தில் நகர சபை, பிரதேச செயலகம், பள்ளிவாயல்கள் சம்மேளனம் மற்றும் உலமா சபை ஆகியன இணைந்து ஒருங்கிணைந்த குழுவாகக் களத்தில் செயற்படுதல்.
03. அவசர நிலைமைகளின்போது பொதுமக்களைப் பாதுகாப்பாகத் தங்கவைப்பதற்காக பள்ளிவாயல்கள் சம்மேளனக் கட்டிடம், ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபம் மற்றும் முஹைதீன் மெத்தை பள்ளிவாயல் உள்ளிட்ட வளாகங்களை முழுமையான தயார் நிலையில் வைத்திருத்தல்.
04. இடர் வலயங்களில் உள்ள மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுதல், அவசர விழிப்புணர்வு அறிவிப்புகளை உடனுக்குடன் வழங்குதல், முதலுதவி வசதிகளை உறுதிப்படுத்துதல் மற்றும் தற்காலிக மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல்.
இத்திட்டங்களுக்கான விரிவான அடுத்தகட்ட வேலைத்திட்டங்களை இறுதி செய்வதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாலோசனைக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (12.10.2026) பிற்பகல் 3.30 மணிக்கு ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





