மின் பிறப்பாக்கியில் மின்கசிவு; வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!!!
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனமொன்றில் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து, அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்புப் பிரிவினரின் விரைவான நடவடிக்கையால் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அக்கரைப்பற்று பிரதான வீதியில், லங்கா ஸ்டோருக்கு அருகாமையில் இயங்கி வரும் ‘LU LU’ வர்த்தக நிறுவனத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, அதன் மேல்தளத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த அக்கரைப்பற்று மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், தீ மேலும் பரவாமல் தடுத்து, தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும், தீ விபத்து காரணமாக குறித்த வர்த்தக நிறுவனக் கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதும் துரிதமாகச் செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மாநகர சபை தீயணைப்புப் பிரிவினருக்கு அங்கு கூடியிருந்த வர்த்தகர்களும் பொதுமக்களும் தமது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
அத்துடன், தீயணைப்புச் சேவையை அக்கரைப்பற்றில் கொண்டுவருவதற்கு காரணமாக இருந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநகர சபை முதல்வருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவிற்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

