மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுமக்களின் கருத்துக்களை கோருகிறது – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு.!!!
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள யோசனை குறித்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் பணிகள் எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் மார்ச் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், பொதுமக்கள் தங்களது கருத்துக்களை வாய்மொழி அல்லது எழுத்து மூலம் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் இக்கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இக்கருத்து பெறும் செயல்முறை நிறைவடைந்த பின்னரே மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக 13.56 சதவீத மின்சாரக் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள அனுமதி கோரி, கடந்த 13 ஆம் திகதி மின்சார சபையினால் யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்காக 11.57 சதவீத கட்டண உயர்வை கோரியிருந்த மின்சார சபையின் யோசனைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.