அல்-இபாதா மன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள்: பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் ஜம்மிய்யத்துல் உலமாவின் வழிகாட்டலில்.!!!
அட்டாளைச்சேனை பிரதேச மூத்த உலமாக்களின் கவலையுடன் உருவாக்கப்பட்ட அல்-இபாதா கலாசார மன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம், ஜம்மிய்யத்துல் உலமா, மரைக்காயர் சபை மற்றும் கல்விமான்களின் ஆலோசனைகளுடன் முன்னெடுக்கப்படும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றிய அவர், கடந்த 14 வருட காலமாக தொடர்ச்சியாக ஹதீஸ் மஜ்லிஸ், பரிசளிப்பு நிகழ்வுகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் இப்தார் நிகழ்வுகளை அல்-இபாதா மன்றம் சிறப்பாக நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், மூத்த உலமாக்களான அல்ஹாஜ் நூர் முகம்மது மௌலவி மற்றும் மறைந்த P.M. காதர் ஹாஜியார் ஆகியோரின் வேண்டுகோளின் பேரில், அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடியை இஸ்லாமிய கலாசாரத்தின் அடையாளமாக மாற்றும் நோக்குடன் ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாக அல்-இபாதா மன்றம் உருவாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் மூத்த உலமாக்களின் கவலையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த மன்றம், கிழக்கு மாகாணத்தில் இயங்கி வரும் உயிரோட்டமுள்ள இயக்கங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளதாகவும், நாட்டின் பிரபல உலமாக்களை அழைத்து மார்க்க சொற்பொழிவுகளை நடத்தி வருவதுடன், கடந்த 14 ஆண்டுகளாக அம்பாறை மாவட்ட மட்டத்தில் இப்தார் நிகழ்வுகளையும் சிறப்பாக நடாத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்த துறைசார் நபர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளையும் அல்-இபாதா மன்றம் தொடர்ச்சியாக நடாத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
தான் தற்போது ஒரு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதனால், நேரடியாக அல்-இபாதா மன்றத்தின் செயற்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கடந்த 14 வருட காலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்த அல்-இபாதா மன்ற உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் அனைத்து பள்ளிவாசல் தலைவர்களுக்கும் தனது விசேட நன்றியை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இனி அல்-இபாதா கலாசார மன்றத்தின் அனைத்து செயற்பாடுகளையும் அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம், ஜம்மிய்யத்துல் உலமா, மரைக்காயர் சபை மற்றும் கல்விமான்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் எனவும், தன்னால் இயன்ற உதவிகளை தொடர்ந்து வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
மேலும், அல்-இபாதா மன்றத்தின் 15வது ஆண்டு ஹதீஸ் மஜ்லிஸ், பரிசளிப்பு நிகழ்வு, சிரமதான நிகழ்வு மற்றும் இப்தார் நிகழ்வுகளை, அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம், ஜம்மிய்யத்துல் உலமா, மரைக்காயர் சபை மற்றும் கல்விமான்கள் இணைந்து நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் விரைவில் நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.