தங்கச் சங்கிலித் திருட்டு: பேருந்து சாரதியாகப் பணியாற்றிய முக்கிய சந்தேக நபர் உட்பட நால்வர் கைது.!!!
• உருக்கப்பட்ட நிலையில் ரூ.7 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான தங்க நகைகள் மீட்பு; கல்முனை தங்கக் கடை ஊழியர்கள் இருவரும் சிக்கினர்.
அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரு பெண்களிடம் தங்கச் சங்கிலிகளைத் திருடிய சம்பவங்கள் தொடர்பில், முக்கிய சந்தேக நபர் உட்பட நான்கு பேர் அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், திருடப்பட்ட தங்கச் சங்கிலிகளை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராகச் செயற்பட்டதாகக் கூறப்படும் அம்பாறை நகர தங்கக் கடை ஊழியர் ஒருவரும், அவற்றைக் கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் கல்முனை தங்கக் கடையில் பணியாற்றிய இருவரும் அடங்குகின்றனர்.
இரு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் திருட்டு: கடந்த ஜூலை மாதம் ஏசல பௌர்ணமி தினத்தன்று, அம்பாறை கொண்டுவட்டுவான் குளத்திற்கு அருகில் பயணித்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி உகன பகுதியில் மற்றொரு பெண்ணின் தங்கச் சங்கிலியும் இதேபோன்ற முறையில் திருடப்பட்டதாகப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட விரிவான விசாரணைகளின்போது, திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர், சம்பவங்களுக்குப் பின்னர் கொழும்பு – கடுவெல பகுதிக்குத் தப்பிச் சென்று பேருந்து சாரதியாகப் பணியாற்றி வந்தமை தெரியவந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த சந்தேக நபர் கடந்த திங்கட்கிழமை (12) அம்பாறைக்குத் திரும்பியுள்ளதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், அம்பாறை இன் விடுதிக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கல்முனை தங்கக் கடையில் உருக்கப்பட்ட நகைகள் மீட்பு: முக்கிய சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருடப்பட்ட தங்கச் சங்கிலிகளை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராகச் செயற்பட்டதாகக் கூறப்படும் அம்பாறை நகர தங்கக் கடை ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், திருடப்பட்ட இரண்டு தங்கச் சங்கிலிகளும் கல்முனையிலுள்ள பிரபல தங்கக் கடையொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை தெரியவந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, குறித்த தங்கக் கடையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, உருக்கப்பட்ட நிலையில் இருந்த இரண்டு தங்கச் சங்கிலிகளும் மீட்கப்பட்டன. அத்துடன், அக்கடையில் பணியாற்றிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மீட்கப்பட்ட தங்க நகைகளின் சந்தைப் பெறுமதி ஏழு இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸ் உயர் அதிகாரிகளின் வழிகாட்டலில் சுற்றிவளைப்பு: அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் உத்தரவின் பேரிலும், அம்பாறை பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சியின் வழிகாட்டலிலும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையிலும் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி தனுஷ்க ரத்நாயக்க மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி முதித பிரியங்கர தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பொலிஸ் கொஸ்தாபல்களான மக்பூல் (43383), சந்திரசேன (67667), ஜயம்பதி (2424), திஸாநாயக்க (86789), மதனசிங்க (35793), சஞ்சீவ (91287), சுனில் (95062) மற்றும் குணவர்தன (17478) ஆகியோரும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றனர்.
சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

