சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள்; 59 பேர் கைது – 23 டிங்கி படகுகள் பறிமுதல்.!!!
-கற்பிட்டி எம்.எச்.எம். சியாஜ்-
இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 23 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
2026 செப்டெம்பர் 11 முதல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் உள்நாட்டு நீர்ப்பரப்பை உள்ளடக்கிய வகையில் இந்த விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்துதல், சட்டவிரோத மீன்பிடி முறைகளில் ஈடுபடுதல் மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
திருகோணமலை, வாகரை, மூதூர், உப்புவெளி, கிரீன்பே, கதிரவேளி, பிளாக் ஸ்டாப், பவுல் கொயிண்ட், கிண்ணியா, நிலாவெளி, குபுருப்பிட்டி, வெருகல், பல்சேனை, புதுமாத்தளன், சாதுகுளம், யாழ்ப்பாணம் வெத்தலைக்கேணி, கட்டைக்காடு, கோவிலன், மன்னார் தாவுல்பாடு மற்றும் சவுத்பார் உள்ளிட்ட கடற்கரை மற்றும் கடற்பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளினால் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மீன்பிடிப் படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, வாகரை, கொட்பே, முல்லைத்தீவு, மூதூர், திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் நீரக வள திணைக்கள அலுவலகங்களிடம் இவை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.







