சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட: 7 இலட்சத்து 44 ஆயிரம் மருந்து மாத்திரைகளுடன் – இருவர் கைது.!!!
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
இலங்கை கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, வத்தளை பகுதியில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்ய முயன்ற 7 இலட்சத்து 44 ஆயிரத்து 500 (744,500) மருந்து மாத்திரைகளுடன் (Pregabalin Capsules) இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை (02) வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய, மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல்கள் ரங்கல மற்றும் கெமுனு, வத்தளை காவல் நிலையம் ஆகியவை இணைந்து வத்தளை பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு லொறி கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அந்த லொறியில் இருந்து, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 744,500 மருந்து மாத்திரைகள் (Pregabalin Capsules) மீட்கப்பட்டதுடன், அவற்றை ஏற்றிச் சென்ற லொறி மற்றும் இரண்டு சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் கல்பிட்டி மற்றும் கோலைகனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மீட்கப்பட்ட மருந்து மாத்திரைகள் மற்றும் லொறி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வத்தளை காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.



