சட்டவிரோத இறக்குமதி பொருட்கள் சிக்கியது: 86,800 பீடிகள், 1,250 கிலோ பீடி இலைகள் பறிமுதல் – ஒருவர் கைது.!!!
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
கற்பிட்டி தழுவ பகுதியில் இலங்கை கடற்படை வியாழக்கிழமை (12) மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெருமளவிலான பொருட்களுடன் ஒருவரை கைது செய்துள்ளது.
இந்த நடவடிக்கையின் போது, 86,800 பீடிகள், 1,250 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள், 132 பதப்படுத்தப்பட்ட பீடி இலை பொதிகள், சுமார் 103 கிலோகிராம் நிலக்கரி மற்றும் 1,594 ஷாம்பு பாக்கெட்டுகள் என்பன ஒரு லொரியுடன் பறிமுதல் செய்யப்பட்டன.
வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னியுடன் இணைக்கப்பட்ட தளுவ கடற்படைப் பிரிவினரால் தழுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான லொரி ஒன்று பரிசோதிக்கப்பட்டது. அதன் போது மேற்கண்ட சட்டவிரோத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மன்னாரைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடிகள், பீடி இலைகள், பதப்படுத்தப்பட்ட பீடி இலை பொதிகள், நிலக்கரி, ஷாம்பு பாக்கெட்டுகள் மற்றும் லொரி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




