காத்தான்குடி கடலில் சட்டவிரோத சுருக்குவலைகள்; 5 வலைகளை மீட்ட கடற்படை.!!!
• ரூ.50 இலட்சம் பெறுமதியான 5 சுருக்குவலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்.
மட்டக்களப்பு, காத்தான்குடி பாலமுனை கடற்பரப்பில் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான 5 சுருக்குவலைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
கல்லடி கடற்படை புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புதன்கிழமை (30) இரவு காத்தான்குடி பாலமுனை கடற்பரப்பில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மீன்பிடிக்காக கடலில் வீசப்பட்டிருந்த நிலையில் உரிமை கோரப்படாத 5 சட்டவிரோத சுருக்குவலைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட குறித்த சுருக்குவலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திடம் வியாழக்கிழமை (01) கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டன.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, பாலமுனை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், களுதாவளை, களுவங்கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட சட்டவிரோத சுருக்குவலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மீனவர் சங்கங்கள் மற்றும் மீனவர்கள் தொடர்ந்து முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.