மட்டக்களப்பில் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையால்: வீடு திருத்த பணிக்கான காசோலைகள் வழங்கி வைப்பு.!!!
(B.M. பயாஸ்)
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடு திருத்த பணிக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் தவிசாளர் பொறியியலாளர் ஜீ.சுகுமாரன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் பங்குபற்றுதலுடன் தொழிநுட்ப உத்தியோகர் எஸ். யதுஷாயினி அவர்களின் ஒழுங்குப்படுத்தலில், இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.
மட்டக்களப்பில் கடந்த ஆண்டு 216 வீடுகள் திருத்தம் செய்யும் பணிகள் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் 103 வீடுகளை முழுமையாக திருத்தம் செய்த பயனாளிகளுக்கு இறுதிக்கட்ட காசோலைகள் வழங்கப்பட்டு, மீதமுள்ள வீடுகளுக்கான காசோலைகளும் விரைவில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த வீடு திருத்த வேலைகள் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பொறியியாளர் எஸ். வினோராஜ் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் 88.36 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போதைய தவிசாளர் பொறியியலாளர் ஜீ.சுகுமாரன் அவர்களின் முயற்சியினால் 2025 ஆம் ஆண்டிற்கு 145 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை பணிப்பாளர் சபை உறுப்பினர் ஜோன்ஷன், தேசிய மக்கள் சக்தி மாநகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், மற்றும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






