காரைதீவு பிரதேச சபையின் 16ஆவது அமர்வு: பொதுப் பிரச்சினைகள், அபிவிருத்தி மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்து ஆராய்வு.!!!
-நூருல் ஹுதா உமர்-
காரைதீவு பிரதேச சபையின் நான்காவது சபையின் 16ஆவது மாதாந்தக் கூட்டம் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தலைமையில் இன்று (13) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபையின் அலுவலக சபா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி உள்ளிட்ட பிரதேசங்களில் நிலவும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
கூட்டத்தில், கடந்த 15ஆவது அமர்வின் கூட்டறிக்கையை நிறைவேற்றுதல், சபைக்குத் தெரியப்படுத்த வேண்டிய விடயங்கள் மற்றும் தவிசாளரின் அறிவிப்புகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
உள்ளூராட்சி மன்றங்களை மேம்படுத்துவதற்காக உள்ளூராட்சி அபிவிருத்தி நிதியத்திலிருந்து கடன் பெற்றுக்கொள்வது தொடர்பான வழிகாட்டல்கள் குறித்தும், 2010, 2011, 2012ஆம் நிதியாண்டுகளுக்கான கோரப்படாத முத்திரைத் தீர்வைக் கட்டணங்களை மீளளிப்பது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் சபையின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
மேலும், 2026ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான செலவினத்தை சபை நிதியிலிருந்து ஈடுசெய்தல், சபை அலுவலகக் கட்டடத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள 18 × 20 மீற்றர் வெற்றுக் காணியை வாடகைக்கு வழங்குதல் ஆகிய பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.
அத்துடன், காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பகுதிகளில் தெருவிளக்குகளை இயக்குதல் மற்றும் அணைத்தல் பணியில் ஈடுபடுவோரை முறையான விண்ணப்பம் மற்றும் தெரிவுச் செயல்முறை ஊடாகப் பணியமர்த்துதல், சபையில் காவலாளி மற்றும் சாரதி பதவிகளில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகத் தகுதியுடைய ஊழியர்களுக்குப் பொறுப்புகளை வழங்குதல் தொடர்பான பிரேரணைகளும் ஆராயப்பட்டன.
சபையின் அபிவிருத்திப் பணிகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக மக்கள் வங்கியில் ஆரம்பிக்கப்பட்டு நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாத கணக்கை முடிவுறுத்தி, அதிலுள்ள பணத்தை இலங்கை வங்கியின் காரைதீவுக் கிளையில் உள்ள சபையின் பொதுக் கணக்கிற்கு மாற்றுவது தொடர்பான பிரேரணையும் முன்வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் தொடர்பில் சபை உறுப்பினர்கள் கலந்துரையாடியதுடன், பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் தேவைகள் குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.
