காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின்: ஆண்டின் முதல் ஒருங்கிணைப்பு கூட்டம்.!!!
(எம்.எஸ்.எம். நூர்தீன்)
காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இவ்வருடத்துக்கான முதலாவது கூட்டம் நேற்று (30) வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் நடைபெற்றது.
இதன் போது கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும், அவற்றின் முன்னேற்ற நிலைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதியொதுக்கீடு, உலக உணவுத் திட்டம், மாவட்ட அபிவிருத்தி திட்டம், மாகாண அபிவிருத்தி வேலைத் திட்டம், வீடமைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கு கடந்த வருடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாகவும், அவற்றில் பெரும்பாலான திட்டங்கள் தற்போது நிறைவு பெற்றுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இக் கூட்டத்தின் போது சுகாதாரம், காணி, வாழ்வாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், புதிய அபிவிருத்தி திட்டங்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டது.
இந்தக் கூட்டம், காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில், காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மெளஜூத் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச். அஸ்பர், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பாளர் யு.கே. அப்துல்லாஹ், உதவி பிரதேச செயலாளர் சில்மியா, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி தனுஜா, பிரதேச செயலக கணக்காளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள், வைத்தியர்கள், காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது, கடந்த கால வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பணிகள் தொடர்பாக, பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி தனுஜா அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.









