காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் மூன்றாவது இரத்ததான முகாம் – 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.!!!
– எம்.ரி.எம். யூனுஸ் –
மனித உயிர்களை காக்கும் உன்னத நோக்குடன் காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட மூன்றாவது இரத்ததான முகாம் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி (Marine Drive) கடற்கரை வீதியில் அமைந்துள்ள மினா பீச் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் அமைப்பின் தலைவர் எம்.எச்.எம். ஹமீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 250-க்கும் மேற்பட்ட குருதிக்கொடையாளர்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி மனிதாபிமானத்தை வெளிப்படுத்தினர்.
காத்தான்குடி தள வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி அலிமா ரஹ்மானின் மேற்பார்வையில், வைத்தியர் நித்திய நந்தனாவின் மருத்துவ பரிசோதனையில் இரத்த சேகரிப்பு இடம்பெற்றது.
இரத்ததான முகாமின் தொடக்க நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத், காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக்க அழககோன், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். ஹாரூன் ரஷாதி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பதில் தலைவர் எம்.ஏ.சி.எம்.ஏ. சத்தார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அதிதிகள், இன்றைய காலகட்டத்தில் விபத்துகள், அவசர சத்திரசிகிச்சைகள், தாய்மை தொடர்பான அவசர நிலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இரத்தத்தின் தேவை அதிகரித்து வருவதாகவும், இவ்வாறான இரத்ததான முகாம்கள் சமூகத்திற்குத் தவிர்க்க முடியாத சேவையாக விளங்குவதாகவும் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, இளைஞர்கள் இரத்ததானம் போன்ற மனிதாபிமான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பு, இதுபோன்ற இரத்ததான முகாம்களை எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக நடத்த வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மொத்தத்தில், சமூக ஒற்றுமை, மனிதாபிமான உணர்வு மற்றும் உயிர் காக்கும் சேவையின் முக்கியத்துவத்தை மீண்டும் நினைவூட்டும் வகையில், காத்தான்குடியில் நடைபெற்ற இந்த மூன்றாவது இரத்ததான முகாம் பெரும் வெற்றியைப் பெற்றதாக அமைந்தது.













