தேசிய உற்பத்தித்திறன் விருதில் காத்தான்குடி நகர சபைக்கு மகுடம்: அகில இலங்கையில் இரண்டாம் இடம் பெற்று வரலாற்றுச் சாதனை.!!!
2026ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருதுப் போட்டியில் காத்தான்குடி நகர சபை அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
குறிப்பாக, கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஒரே உள்ளூராட்சி மன்றம் என்ற பெருமையையும் காத்தான்குடி நகர சபை தனதாக்கிக் கொண்டுள்ளது.
இதற்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (08) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டதுடன், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
இதன்போது காத்தான்குடி நகர சபை சார்பில் நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர், நகர சபையின் செயலாளர் றினோஸா முப்லிஹ், கணக்காளர் இதிரிஸ் மற்றும் நகர சபையின் உற்பத்தித்திறன் குழுவினர் கலந்துகொண்டு விருதைப் பெற்றுக்கொண்டனர்.
நகர சபையின் சிறந்த நிர்வாக முகாமைத்துவம், வினைத்திறனான செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கான சேவைகளை மேம்படுத்துவதில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரமாக இந்த விருது அமைந்துள்ளது.
காத்தான்குடி நகர சபையின் இந்தச் சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி நிர்வாகத்துறைக்கு பெருமை சேர்த்துள்ள இந்தச் சாதனை, காத்தான்குடி நகர சபையின் நிர்வாகப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது.






