முன்மாதிரி நகர சபை சேவைகளை அறிய காத்தான்குடிக்கு கெக்கிராவை பிரதேச சபை குழு விஜயம்.!!!
உள்ளூராட்சி அமைச்சின் வேண்டுகோளுக்கிணங்க, முன்மாதிரி நகர சபையாகக் கருதப்படும் காத்தான்குடி நகர சபையின் செயல்பாடுகளை பார்வையிடுவதற்காக கெக்கிராவை பிரதேச சபையைச் சேர்ந்த குழுவினர் நேற்று முன்தினம் (07) காத்தான்குடிக்கு வருகை தந்தனர்.
கெக்கிராவை பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர், நூலகர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்த பயணத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது காத்தான்குடி நகர சபையினால் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து அவர்கள் விரிவாக அறிந்து கொண்டதுடன், காத்தான்குடி பொது நூலகம், திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவ நிலையம், பூர்வீக நூதன சாலை, வாவிக்கரை படகு சேவை, அல் அக்ஸா பள்ளிவாயல், காத்தான்குடி கடற்கரை உள்ளிட்ட முக்கிய இடங்களையும் பார்வையிட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் அவர்களால் நகர சபையின் சேவைகள் மற்றும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் முழுமையான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும் இந்த நிகழ்வில் நகர சபை செயலாளர் ரினோஷா முப்லிஹ் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஐ.எல்.எம். மாஹிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





































