குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி 8ஆவது நாளாகவும் தொடர்கின்றன.!!!
மட்டக்களப்பு, குருக்கள்மடம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி ஒன்று இருப்பதாக எழுந்துள்ள சந்தேகத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள், இதிங்கசெவ்வாய்கிழமை (13) எட்டாவது நாளாகவும் தொடர்கின்றன.
களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி த. பிரதீபன் அவர்களின் மேற்பார்வையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொல்பொருள் ஆய்வு நிபுணர் கலாநிதி ராஜ் சோமதேவ, தடயவியல் மற்றும் மானுடவியல் நிபுணர்களும் சட்ட வைத்திய அதிகாரிகளுமான தரங்க டீ சில்வா, கிரியுல்ல ஆகியோர் தலைமையிலான குழுவினர் அகழ்வாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குருக்கள்மடம் கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார் காணியொன்றில் மனிதப் புதைகுழி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், வழக்கின் முறைப்பாட்டாளர்கள் சார்பான சட்டத்தரணி மு. அஸ்ஸம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கடந்த 6ஆம் திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பிரதேச சபையின் ஆளணி மற்றும் இயந்திர உதவிகளுடனும், காத்தான்குடி சமூக அமைப்புகளின் ஒத்துழைப்புடனும் அகழ்வாய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு எட்டாவது நாளை எட்டியுள்ள நிலையில், இதுவரை குறிப்பிடத்தக்க சந்தேகத்திற்கிடமான தடயங்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.









