விதிமுறைகளை மீறிய மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை; 10 வாகனங்கள் பறிமுதல்.!!!
சம்மாந்துறை பொலிஸாரால் நேற்று (31) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை நடவடிக்கையின்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனைக்கமைய, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரால் இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதுடன், பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், 10 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை செலுத்துவோருக்கு எதிராக தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சம்மாந்துறை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.