ஹபரணையில் தீக்கிரையான சொகுசுப் பேருந்து; சாரதி, உதவியாளர் காயமின்றித் தப்பினர்.!!!
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று இன்று (11) அதிகாலை தீப்பற்றி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
ஹபரண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜக்கா பங்குவ பகுதியை அண்மித்த 144ஆம் கட்டைப் பகுதியில் அதிகாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலைக்கு வருகைதரவிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிவருவதற்காகப் பேருந்து பயணித்துக்கொண்டிருந்தபோதே தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பேருந்தில் இருந்த சாரதியும் உதவியாளரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர். எனினும், தீப்பரவல் காரணமாகப் பேருந்து முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
சம்பவத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை ஹபரண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
