உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 26, 2026

Hot News

IMG-20261123-WA0059
ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கை: போராட்டத்தால் தீர்வா.??? பேச்சுவார்த்தையால் தீர்வா.???
IMG-20261115-WA0011
2027 வரவு–செலவுத் திட்டம்: அபிவிருத்திக்கான புதிய பாதையா? மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுமா?

Share :

தெற்கு கடற்பரப்பில் பாரிய போதைப்பொருள் வேட்டை: 101 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் மீட்பு – ஐவர் கைது.!!!

– கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ் –

இலங்கையின் தெற்குக் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கடற்படை நடவடிக்கையின்போது, 101 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கடத்தலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, போதைப்பொருட்களைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த படகில் ஆறு சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் மற்றும் சந்தேகநபர்கள் இன்று (13) காலை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் நிபுணத்துவ உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், 52 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 58 கிலோகிராம் 736 கிராம் ஹெரோயினும், 50 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த 43 கிலோகிராம் 134 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்தச் சந்தைப் பெறுமதி 150 கோடி ரூபாவிற்கும் அதிகமாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள், போதைப்பொருட்கள் மற்றும் மீன்பிடிப் படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ உள்ளிட்ட கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகளும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் பார்வையிட்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர், தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதுடன், ‘ஒன்றிணைந்த தேசம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை தொடர்ச்சியாகத் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

கடற்படையினரால் ஆழ்கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் மூலமே இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தல் நாட்டின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தி மற்றும் இளைஞர்கள், பாடசாலை மாணவர்களின் எதிர்காலம் ஆகியவற்றுக்குப் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘ஒன்றிணைந்த தேசம்’ வேலைத்திட்டத்தின் கீழ் கடற்படை, கடலோரக் காவல்படை, முப்படைகள், பொலிஸார், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படை ஆகியன உள்நாட்டு, வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து தரை மற்றும் கடல் வழியான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் புதிய சட்ட ஏற்பாடுகள் மூலம் கடற்படையின் கண்காணிப்புத் திறன் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் ஆதரவுடன் சட்ட அமுலாக்கல் அமைப்புகள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளால் கடல், வான் மற்றும் துறைமுகங்கள் ஊடாக போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கான வழிகள் தடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோரும் அவர்களுக்கு உதவுவோரும் இத்தகைய சட்டவிரோதச் செயற்பாடுகளிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.

அதேவேளை, கடலில் ஆபத்தில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்பதிலும், சட்டபூர்வமான மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் கடற்படை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் எனத் தெரிவித்தார்.

மீன்பிடித் தொழிலைப் போர்வையாகப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காகப் பல நாட்களாக ஆழ்கடலில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்ட கடற்படையினர் மற்றும் அரச புலனாய்வுச் சேவை உள்ளிட்ட ஏனைய புலனாய்வு அமைப்புகளுக்கும் ஜனாதிபதி மற்றும் நாட்டு மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை 1818 அல்லது 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கங்கள் ஊடாக சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் ஊடகங்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

இதேவேளை, 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ‘ஒன்றிணைந்த தேசம்’ தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் 1,150 கோடி ரூபாவிற்கும் அதிகமான சந்தைப் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், 2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 740 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1361559

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time