காத்தான்குடியில் சுகாதார அதிகாரிகள் பாரிய சுற்றிவளைப்பு: 48 வர்த்தக நிலையங்கள் சோதனை; 21 வர்த்தகர்களுக்கு வழக்கு – பெருமளவு உணவுப்பொருட்கள் மீட்பு.!!!
(ஜே.கே)
மட்டக்களப்பு, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட, ஹோட்டல்கள், பல சரக்கு கடைகள், சுப்பர் மார்க்கெட்கள், மார்க்கட்டுகள், மருந்தகங்கள், பேக்கரிகள் மீது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட பாரிய திடீர் தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பின் போது 58 வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டதுடன் 21 வர்த்தகர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரனின் பணிப்புரையின் பெயரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸுர்தீனின் வழிகாட்டலில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குறித்த தேடுதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர் .
மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த, பழுதடைந்த, காலாவதியான, பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுப் பொருட்களை விற்பனை செய்த, லேபில் காட்சிப்படுத்தாத வர்த்தக நிலையங்களின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 5 மணித்தியாலங்கள் வரை இடம்பெற்ற இச்சுற்றிவளைப்பின்போது பெருமளவிலான பழுதடைந்த மனித பாவனைக்கு உதவாத காலாவதியான உணவுப் பொருட்கள் சுகாதார அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டவுள்ளது.















