கிழக்கு மாகாணத்தில் உலக வங்கியின் REVIVE திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை.!!!
கிழக்கு மாகாணத்தில் பிராந்தியப் பொருளாதார அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் உலக வங்கியின் REVIVE திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் நேற்று (06) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் சாத்தியமான பொருளாதாரங்கள் மூலம் பிராந்திய அதிகாரமளித்தல் (REVIVE) திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகள் மற்றும் அவற்றை துரிதப்படுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
உலக வங்கியின் REVIVE திட்டச் செயலாக்க ஆதரவுக் குழுவினர், கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர், நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இதன்போது, கிழக்கு மாகாணத்துக்கான திட்டச் செயலாக்கப் பிரிவை (PIU) நிறுவி, அதனை வினைத்திறனுடன் செயற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன், தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்து பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகளும் ஆராயப்பட்டன.
மேலும், உள்ளூர் பொருளாதார அபிவிருத்தி (LED) திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டுள்ள பொருளாதாரக் குழுமங்களில் பிராந்தியப் பொருளாதார அபிவிருத்தி மற்றும் மதிப்புச் சங்கிலி அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
தெரிவுசெய்யப்பட்ட பொருளாதாரக் குழுமங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனை நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சாத்தியக்கூறு ஆய்வுகளின் முன்னேற்றம், அவற்றின் முக்கிய முடிவுகள், எதிர்நோக்கப்படும் சிக்கல்கள் மற்றும் ஆய்வுகளை விரைவாக நிறைவு செய்வதற்கான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் விரிவாக மதிப்பாய்வு செய்யப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளை விரைவாக அடைவதற்கு, கிழக்கு மாகாண சபை, திட்டச் செயலாக்கப் பிரிவு, அரச நிறுவனங்கள், ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கு இடையிலான நெருங்கிய ஒருங்கிணைப்பு அவசியம் என ஆளுநர் தலைமையிலான கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.




