ஆசிரியர், அதிபர் சேவைகளின் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை; பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு.!!!
ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்கு நியாயமானதும் நீண்டகால அடிப்படையிலானதுமான தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளின் தொழில்சார் தரத்தையும் தரநிலைகளையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக கல்விசார் தொழில்சார் பேரவையை (Education Professional Council) நிறுவுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரச சேவையில் நிலவும் சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட சம்பள மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் ஊடாகவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசாங்கத்தின் மூன்று கட்ட சம்பள அதிகரிப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் 2027 ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் 2026 நவம்பர் 25ஆம் திகதி இசுறுபாய கல்வி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஆசிரியர் மற்றும் அதிபர் சேவைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகள், கொடுப்பனவுகள் மற்றும் அச்சேவைகளின் தொழில்சார் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.




