காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமுள்ள மர்மப்பொருள் கரையொதுங்கல்: விசாரணை ஆரம்பம்.!!!
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் பாரிய அளவிலான மர்மப்பொருள் கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அழகக்கோன் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை கரையொதுங்கியுள்ள இந்த மர்மப்பொருள், சுமார் 25 அடி நீளம் மற்றும் 4 அடி உயரம் கொண்டதாகக் காணப்படுகிறது.
பொறுப்பதிகாரியின் தகவல்படி, இது முழுமையாக ‘ரெஜிபோம்’ (மென்புடைப்பு மீள்மம்) எனப்படும் எளிய பொருளால் உருவாக்கப்பட்டதாகும். கப்பல்கள் கரையில் தரைதட்டும்போது அல்லது துறைமுகங்களில் நங்கூரமிடும்போது, கப்பலின் மேலோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காகப் பயன்படும் பாதுகாப்புத் தடுப்பாக இது இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மர்மப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையினர் முன்னெடுத்து வருகின்றனர். காத்தான்குடி கடற்கரையில் இப்பொருளைப் பார்வையிடுவதற்காக பெருமளவிலான பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.