காத்தான்குடி அல்-அக்ஸா பள்ளிவாயலுக்கு நெதர்லாந்து தூதுவர் விஜயம்; நல்லிணக்கம் குறித்து முக்கிய கலந்துரையாடல்.!!!
மத நல்லிணக்கம் மற்றும் சமூக புரிந்துணர்வை வலுப்படுத்தும் வகையில் நெதர்லாந்து தூதுவர் மற்றும் காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாயல் நிர்வாகத்தினருக்கு இடையே சந்திப்பு இடம்பெற்றது.
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் வைப் யாகோப் டி போயர் (Wiebe Jakob de Boer), நாமல் பெரேரா (Namal Perera), க்ரிஷேன் மெண்டிஸ் (Chryshane Mendis) ஆகியோர் இன்று (03) காலை புதிய காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாயலுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, பள்ளிவாயல் நிர்வாகத்தின் சார்பில் தூதுவருக்கு விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன், காத்தான்குடி பிரதேசத்தின் வரலாறு, சமூக, கல்வி, சமய மற்றும் அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன், அல் அக்ஸா பெரிய ஜும்மா பள்ளிவாயலின் சமய, கல்வி, சமூக மற்றும் மனிதாபிமானப் பணிகள் குறித்தும் தூதுவருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
பள்ளிவாயல் ATMT (Awareness Through Mosque Tour) குழுத் தலைவர், சிரேஷ்ட சட்டத்தரணி A. உவைஸ் LLB தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தூதுவரால் காத்தான்குடி மற்றும் பள்ளிவாயல் தொடர்பில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து, தூதுவர் பள்ளிவாயல் வளாகத்தை பார்வையிட்டு அதன் கட்டமைப்பு, செயற்பாடுகள் மற்றும் சமூகப் பணிகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
இச்சந்திப்பின்போது மத நல்லிணக்கம், சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, கல்வி, சமூக அபிவிருத்தி மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பிலும் பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பள்ளிவாயல் தலைவர் மற்றும் நகர சபை உறுப்பினர் MIM. ஜவாஹிர், உப தலைவர் MIM. பைசர், நகர சபை உறுப்பினர் மௌலவி அஜ்வத் பலாஹி, பிரதம இமாம் அஷ்-ஷெய்க் MMM. இல்ஹாம் (பலாஹி) உள்ளிட்ட பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இவ்விஜயம் இலங்கை–நெதர்லாந்து நட்புறவு, மத நல்லிணக்கம் மற்றும் சமூகங்களுக்கிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தும் முக்கிய சந்திப்பாக அமைந்துள்ளது.









