கிழக்கில் புற்றுநோயாளர் பராமரிப்பை வலுப்படுத்த புதிய திட்டங்கள்; ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடல்.!!!
கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் எதிர்கால மக்கள் நலத் திட்டங்களை ஊடகங்களின் ஊடாக மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடனான விசேட சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்றது.
கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 55 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஆரம்பமாக ஊடகவியலாளர்கள் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நோயாளர்களையும், நிலையத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் வளாகத்தையும் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் இயக்குநர் சபை உறுப்பினரும் ஓய்வுநிலை அதிபருமான எம். ஜலால்தீன் வரவேற்புரையை நிகழ்த்தினார்.
அமைப்பின் பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் புள்ளிவிபரங்கள் தொடர்பான விளக்கங்களை தாதிய உத்தியோகத்தர் எஸ். றிஸ்ரான் வழங்கினார். கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையம் தொடர்பான அறிமுகம் மற்றும் விளக்கவுரையை பொறியியலாளர் எஸ்.எல். கால்டீன் வழங்கியதுடன், அமைப்பின் திட்ட ஆலோசகர் யூ. முஜிபுர்ரகுமான் திட்டங்கள் தொடர்பான விளக்கவுரையை நிகழ்த்தினார்.
மேலும், தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் (NVQ) தொடர்பான விளக்கவுரையை இலங்கை தொழிற் கல்விப் பயிற்சி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் வி. கனகசுந்தரம் வழங்கினார்.
நிகழ்வில் விசேட உரையாற்றிய கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் தவிசாளர் எஸ்.எல்.எம். பௌஸ், நிலையத்தின் எதிர்கால மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அதன் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதன் அவசியம் தொடர்பில் கருத்துகளை முன்வைத்தார்.
இதன்போது, எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி புதிய கற்கைநெறிக்கான நேர்முகப் பரீட்சை மற்றும் கற்கைநெறிகள் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு ஆகியன நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கிழக்குப் பிராந்தியத்தில் புற்றுநோயாளர்களுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் ஆதரவு சேவைகளை வழங்குவதில் நிலையம் முன்னெடுத்து வரும் பணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு இதன்போது விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.











