“ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது; சட்டத்தின் முன் அனைவரும் சமம்” – கந்தசாமி பிரபு.!!!
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்பில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமமாகவே நடத்தப்படுவார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் கடந்த 07ஆம் திகதி ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
விசாரணைகளின் முடிவில் எடுக்கப்படும் தீர்மானங்கள் எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் எனவும், அனைவரும் சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் அரசாங்கமாகும். ஜனாதிபதி வேட்பாளராக இருந்தவர்களாக இருந்தாலும், ஆளுநராக இருந்தவர்களாக இருந்தாலும் அல்லது தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே சட்டமே பொருந்தும்” என அவர் குறிப்பிட்டார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு இடையிலான அரசியல் தொடர்புகள் குறித்தும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
ராஜபக்ஷ குடும்பத்தினரை கடந்த காலங்களில் விமர்சித்த ரணில் விக்ரமசிங்க, பின்னர் அவர்களுடன் இணைந்து ஆட்சியில் பங்கேற்றதாகவும், தற்போது அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதாகவும் கந்தசாமி பிரபு குற்றஞ்சாட்டினார்.
அதேவேளை, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் எனக் குறிப்பிட்ட அவர், அவருக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்தார்.
நாட்டின் நீதித்துறையும் விசாரணை அமைப்புகளும் தற்போது சுயாதீனமாக செயற்பட்டு வருவதாகவும், “பதவியில் இருப்பவர் சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டம் தனது கடமையைச் செய்யும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.