கொழும்பு துறைமுக எண்ணெய்த் தாங்கியில் கசிவு; முகத்துவாரம் கடற்கரையின் 3 கி.மீற்றருக்கும் அதிகமான பகுதி மாசடைவு.!!!
கொழும்பு துறைமுகத்திலுள்ள எண்ணெய் சேமிப்புத் தாங்கியொன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக, முகத்துவாரம் (மோதரை) கடற்கரையை அண்டிய மூன்று கிலோமீற்றருக்கும் அதிகமான கடற்கரைப் பகுதி எண்ணெய் மாசுபாட்டுக்கு உள்ளாகியுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை (MEPA) தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் 21ஆம் திகதி, சுமார் 1,000 தொன் கொள்ளளவைக் கொண்ட JCT இலக்கம் 108 எண்ணெய்த் தாங்கியின் சேதமடைந்த வடிகால் வால்வு ஊடாகக் கப்பல் எரிபொருள் (MGO) கசிந்துள்ளது.
குறித்த எண்ணெய் மாநகர சபையின் வடிகால் கால்வாய் வழியாகச் சென்று முகத்துவாரம் கடற்கரை ஊடாகக் கடலில் கலந்துள்ளது. இதனால் படகுகள் நிறுத்துமிடம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகள் மாசடைந்துள்ளன.
இது தொடர்பான தகவல் காலை 9.30 மணியளவில் கிடைத்ததைத் தொடர்ந்து, இலங்கை துறைமுக அதிகாரசபையினால் காலை 10.30 மணியளவில் எண்ணெய்க் கசிவு முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், அதற்கு முன்னதாகவே குறிப்பிட்டளவு எண்ணெய் கடலில் கலந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மேற்பார்வையில் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை கடலோரக் காவல்படையினர் இணைந்து சுத்திகரிப்புப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்காகக் கடலில் விசேட எண்ணெய்த் தடுப்பு மிதவைகள் (Oil Containment Booms) பொருத்தப்பட்டு, பரவியுள்ள எண்ணெயை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கடலில் கலந்துள்ள எண்ணெயின் சரியான அளவு இதுவரை வெளியிடப்படவில்லை. சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.