காத்தான்குடி நகரசபை அமர்வில் கறுப்பு பட்டியுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.!!!
• தவிசாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏழு உறுப்பினர்கள் பங்கேற்பு.
காத்தான்குடி நகரசபையின் 16ஆவது சபை அமர்வு இன்று (24) வியாழக்கிழமை நடைபெற்றபோது, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இன்றைய சபை அமர்வு ஆரம்பமானது.
இதன்போது, தவிசாளரின் சில நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நகரசபையின் ஏழு உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் பங்கேற்றனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படுவது, நகரசபை அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாமை மற்றும் நகரசபையின் வேலைத்திட்டங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக நகரசபை உறுப்பினர் ஏ.எம். பர்சாத் தெரிவித்தார்.
பல கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்பு
காத்தான்குடி நகரசபையில் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் சக்தி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுயேட்சைக் குழு ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களே கறுப்பு பட்டி அணிந்து இன்றைய சபை அமர்வில் கலந்து கொண்டனர்.
இதேவேளை, காத்தான்குடி நகரசபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





