கல்கிஸ்ஸ பொலிஸில் பரபரப்பு: தடுப்புக்காவலில் இருந்த பெண் தப்பினார் – 3 பொலிஸார் இடைநீக்கம், 8 மணி நேரத்தில் மீண்டும் கைது.!!!
கொழும்பின் கல்கிஸ்ஸ பொலிஸ் தலைமையகத்தில் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் போதைப்பொருள் கடத்தல்காரி ஒருவர் காவலில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக, இரண்டு பொலிஸ் சார்ஜென்ட்கள் மற்றும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இரவு நேரக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு சார்ஜென்ட்களும், சந்தேக நபரின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தகவலின்படி, கடந்த 16 ஆம் திகதி தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த பெண் சந்தேக நபர், பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் பாதுகாப்புடன் கழிப்பறைக்கு சென்றபோது திடீரென காவலில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். பின்னர், பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 8 மணி நேர தேடுதல் நடவடிக்கையின் பின்னர், அதே நாளில் தலவத்துகொட கிம்புலா எல பகுதியில் குறித்த சந்தேக நபர் விசேட பொலிஸ் குழுவினரால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.