ரயிலுடன் மோதிய தனியார் பஸ்; சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் – சமிக்ஞை விளக்கு குறித்து மக்கள் குற்றச்சாட்டு.!!!
ரத்கம, ஓவ்கந்த, கபுமுல்ல பகுதியில் இன்று (07) பிற்பகல் 2 மணியளவில் தனியார் பஸ் ஒன்று ‘ரஜரட்ட ரெஜினி’ அதிவேக ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ‘ரஜரட்ட ரெஜினி’ ரயிலுடன் மோதிய இந்த விபத்து, கபுமுல்ல புகையிரத வீதி கடவையில் இடம்பெற்றுள்ளது.
புகையிரத வீதி கடவையை பஸ் கடந்து முன்னோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அதன் பின்பகுதி ரயிலுடன் மோதியுள்ளது. இதனால் பஸ்ஸின் பின்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்து இடம்பெற்றபோது பஸ்ஸில் சாரதி மாத்திரமே இருந்ததாகவும், அவர் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதாகவும் ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கபுமுல்ல பகுதியில் உள்ள பழுதுபார்க்கும் நிலையமொன்றுக்கு திருத்தப் பணிகளுக்காக பஸ் கொண்டு செல்லப்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமிக்ஞை விளக்கு குறித்து மக்கள் குற்றச்சாட்டு
இதேவேளை, குறித்த புகையிரத வீதி கடவையின் சமிக்ஞை விளக்குகள் முறையாகச் செயற்படுவதில்லை என பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சமிக்ஞை விளக்குகள் எவ்வித ஒழுங்குமுறையுமின்றி எப்போதும் ஒளிரும் நிலையில் காணப்படுவதாகவும், இதனால் வாகன சாரதிகளுக்கு குழப்பம் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், புகையிரத கடவை வீதியை விட உயரமாக அமைந்துள்ளதுடன், அப்பகுதியில் வேகத்தடைகளும் காணப்படுவதால் வாகனப் போக்குவரத்து சிரமமாக இருப்பதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



