கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் சி. மௌனகுரு நியமனம்.!!!
• கலை, பண்பாட்டுத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக அறியப்பட்டவர்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது புதிய வேந்தராக ஓய்வுபெற்ற பேராசிரியர் சி. மௌனகுரு நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் நுண்கலைத்துறைத் தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் சி. மௌனகுரு, பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
கூத்துக்கலை மற்றும் நாடகக் கலைகளின் சிறப்புகளை இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் அறிமுகப்படுத்தியவராகவும் அவர் அறியப்படுகிறார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது வேந்தராக பேராசிரியர் சி. மௌனகுரு நியமிக்கப்பட்டுள்ளார்.
நீண்டகால கல்விப் பணியாற்றியவர்: முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் 1967 முதல் 1968 வரை மட்டக்களப்பிலுள்ள வின்சென்ட் மகளிர் உயர்தரக் கல்லூரி, மைக்கேல் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராக தமிழ் கற்பித்தார்.
அரச ஆசிரியர் நியமனம் பெற்ற பின்னர் 1968ஆம் ஆண்டு கல்முனை சாஹிரா கல்லூரியிலும், 1969ஆம் ஆண்டு கல்முனை வெஸ்லிக் கல்லூரியிலும், 1970ஆம் ஆண்டு வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1972 முதல் 1976ஆம் ஆண்டு வரை கொழும்பில் உள்ள கல்வி அமைச்சின் பாடவிதான அபிவிருத்தி நிலையத்தில் பாடநூல் எழுத்தாளராகப் பணியாற்றினார்.
1977ஆம் ஆண்டு யாழ்ப்பாண கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றியதுடன், யாழ்ப்பாணம் உஸ்மானியாக் கல்லூரியிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.
1981ஆம் ஆண்டு பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆசிரிய மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் முக்கிய பங்களிப்பு: 1984 முதல் 1988ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1989 முதல் 1991ஆம் ஆண்டு வரை சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
1992ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறை ஆரம்பிக்கப்பட்டபோது பேராசிரியர் சி. மௌனகுரு அதில் இணைந்து அதன் வளர்ச்சிக்கு பங்களித்தார்.
இதன்போது நுண்கலைத்துறைத் தலைவராகவும், கலை மற்றும் பண்பாட்டுத்துறை பீடாதிபதியாகவும், பதில் துணைவேந்தராகவும், சுவாமி விபுலானந்தர் இசை மற்றும் நடன வளாகத்தின் இணைப்பாளராகவும், நூலகக் குழுத் தலைவராகவும், தமிழ்ச் சங்கப் போஷகராகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
நீண்டகால கல்விச் சேவை, கலை மற்றும் பண்பாட்டுத்துறைக்கான பங்களிப்பு ஆகியவற்றைக் கொண்ட பேராசிரியர் சி. மௌனகுருவின் நியமனம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய நிர்வாகப் பொறுப்பாக அமைந்துள்ளது.