மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு டெங்கு: DHF வகை ஆபத்தான டெங்கு பரவல்.!!!
●கட்டுப்படுத்த சுகாதார அமைச்சின் பாரிய நடவடிக்கை.
(ஜே.கே)
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் மாத்திரம் திங்கட்கிழமை (ஒரே நாளில்) 7 பேருக்கு டெங்கு நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ. உதயகுமார் தெரிவித்தார்.
கல்லடி, நாவற்குடா, சேத்துக்குடா, புளியந்தீவு, நொச்சு முனை உள்ளிட்ட பகுதிகளில் இந்த நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தற்போது பரவி வரும் டெங்கு நோய் DHF (Dengue Hemorrhagic Fever) எனப்படும் குருதிப்பெருக்குடன் கூடிய மிக ஆபத்தான வகையாக காணப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியம் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் நேற்று (13) பாரிய சோதனை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. டெங்கு குழம்பிகள் (Mosquito breeding sites) இனங்காணப்பட்ட பகுதிகளில் 242 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன் போது டெங்கு குடம்பிகள் உருவாகும் வகையில் சுற்றுச் சூழலை பராமரிக்க தவறிய வீடுகள் மற்றும் இடங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன், பல இடங்களில் சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
மேலும், சுற்றுச் சூழலை டெங்கு பரவக் கூடிய நிலையாக வைத்திருக்கும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
டெங்கு நோயின் அபாயத்தை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தமது வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கும் இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சுகாதார திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.





