உயிரிழந்தோர், யாசகர்களின் அடையாளங்களில் சிம் அட்டைகள்: போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புதிய சூழ்ச்சி.!!!
— மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திராயன தெரிவிப்பு.
உயிரிழந்தவர்கள் மற்றும் யாசகர்களின் தேசிய அடையாள அட்டைகளை தவறாகப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிம் அட்டைகளை பெற்றுக்கொள்வதாக மத்திய மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திராயன தெரிவித்தார்.
தொலைபேசி நிறுவனங்கள் அடையாளங்களை முறையாக உறுதிப்படுத்தாமல் சிம் அட்டைகளை வழங்குவது, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் தடையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக குற்றவாளிகள் கண்காணிப்பைத் தப்பித்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதற்கு வசதி ஏற்படுவதாகவும் கூறினார்.
மேலும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் சிறைச்சாலைகளில் கடத்தல்காரர்களுடன் தங்குவதால், சிறைகள் குற்றவாளிகளை உருவாக்கும் “தொழிற்சாலைகளாக” மாறிவருகின்றன என்ற கவலையையும் அவர் வெளியிட்டார்.
போதைப்பொருள் பயன்படுத்துபவர்களை குற்றவாளிகளாக அல்லாது நோயாளிகளாகக் கருதி, அவர்களைச் சுயவிருப்பின் பேரில் புனர்வாழ்வுக்கு உட்படுத்தும் சமூக மனநிலை உருவாக வேண்டிய அவசியத்தையும் லலித் பத்திராயன வலியுறுத்தினார்.
இதனுடன், உயிரிழந்தவர்களின் பெயர்களில் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகள் வழியாக கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன என்றும், வங்கி சட்டங்கள் காரணமாக இவ்வாறான கணக்குகளை விரைவாகக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதில் சிரமங்கள் நிலவுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் ஒழிப்பில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் சமூகத்தின் ஒருங்கிணைந்த பொறுப்பு அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.