விசேட அதிரடிப்படையினரின் அதிரடி நடவடிக்கை; ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது.!!!
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்வெல்ல பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோவில் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கங்வெல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த நபரை இலக்கு வைத்து வெள்ளிக்கிழமை (11) மாலை திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையின்போது, சந்தேக நபரிடமிருந்து 15 கிராமுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் ஏனைய சான்றுப்பொருட்களுடன் சந்தேக நபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.