சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் – காத்தான்குடி நகர முதல்வர் சந்திப்பு: காத்தான்குடி அபிவிருத்தி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.!!!
புனித உம்ரா கடமையினை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா சென்றுள்ள கௌரவ காத்தான்குடி நகர முதல்வர் SHM அஸ்பர் JP UM அவர்கள், 20/01/2026 செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர் OL. அமீர் அஜ்வத் அவர்களை அவர்களது உத்தியோகபூர்வ வாசஸ்தளத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இச் சந்திப்பின் போது காத்தான்குடி பிரதேசத்தின் அபிவிருத்தி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
அதன்படி,
காத்தான்குடி நகரில் ஷரீஆ அடிப்படையிலான சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புதல்,
சவூதி அரேபிய பல்கலைக்கழகங்களில் எமது பிரதேச மாணவர்களை புலமைப்பரிசில் அடிப்படையில் இணைத்துக்கொள்வது,
எமது இளைஞர், யுவதிகளுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல்,
காத்தான்குடி வர்த்தகர்களை முதலீட்டாளர்களாக மாற்றி, சவூதி அரேபியாவில் முதலீடுகள் செய்து தொழிற்சாலைகள் உருவாக்குதல் மற்றும் அதன் மூலம் எமது பிரதேச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல் போன்ற விடயங்கள் முக்கியமாக கலந்துரையாடப்பட்டன.
அத்தோடு, காத்தான்குடி பிரதேசத்தில் நிலவும் முக்கிய தேவைகள் குறித்தும் தூதுவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் காத்தான்குடி நகரசபை மற்றும் ரியாத் ஆளுநர் இடையே நட்புறவை ஏற்படுத்தி, நகரசபையின் திண்மக்கழிவகற்றல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு தேவையான வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், சவூதி அரசாங்கத்துடன் இணைந்து காத்தான்குடி நகரசபைக்கு தேவையான அபிவிருத்தி உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடனும் கலந்துரையாடப்பட்டு, மிக விரைவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பு காத்தான்குடி நகரத்தின் எதிர்கால அபிவிருத்திக்கான ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகின்றது.







